
கண்டி - கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதி நாளை வரை மூடப்பட்டிருக்கும்
மண்சரிவு அபாயம் காரணமாக நேற்றிரவு முதல் மூடப்பட்ட கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது.
நாளை (12) முற்பகல் வரை இந்தப் பாதை மூடப்பட்டிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் காரணமாக நேற்றிரவு முதல் மூடப்பட்டுள்ள, கண்டி - கொழும்பு பிரதான வீதியில் கீழ் கடுகண்ணாவ பகுதியை நாளை (12) காலை 9 மணிவரை தொடர்ந்தும் மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.
இப்பகுதியில் இன்று (11) காலை மேற்கொள்ளப்பட்ட ஆய்வினை அடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மற்றும் புவியியல் ஆய்வு நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழையினால் நாட்டின் பல பாகங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதே போன்று நேற்று (10) கொழும்பு - கண்டி வீதியின் கீழ் கடுகண்ணாவ பிரதேசத்தில் பழக்கடைகள் அமைந்துள்ள பகுதியிலும் மண்சரிவு ஏற்பட்டிருந்தது.
இந்த ஆபத்தான நிலைமை காரணமாகக் கொழும்பு கண்டி பிரதான வீதி, கீழ் கடுகண்ணாவ பிரதேசத்தில் மூடப்பட்டது.