புலமைப்பரிசில், சாதாரண தர, உயர்தர பரீட்சைகளுக்கான புதிய நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை அனுமதி!
ஐந்தாம் தரம் புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான, திருத்தப்பட்ட புதிய நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொவிட் -19 பெருந்தொற்று நிலைமையால் 06 மாதங்களின் பின்னர், 5 ஆம் தரப் புலமைப்பரிசில் மாணவர்களுக்காக கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்காக எதிர்வரும் 08 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
அதற்கமைய, பரீட்சைகளில் தோற்றுவதற்காகவுள்ள மாணவர்களுக்கு பாடசாலைகள் திறக்கபட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை பூரணப்படுத்துவதற்காக போதுமானளவு காலம் வழங்கப்பட வேண்டியுள்ளது.
இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு பரீட்சைகளை நடாத்துவதற்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைகள் கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, 5 ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையை 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே, கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை 2022 பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் மார்ச் 05 ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை 2022 மே 23 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2022 ஜூன் முதலாம் திகதி வரை நடத்துவதெனவும் புதிய நேர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.