கிழக்கில் கொரோனா தொற்றுக்குள்ளான இராணுவ சிப்பாயின் குடும்ப அங்கத்தவர்கள் 48 பேர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
திருகோணமலை மாவட்டத்தின் அக்போகம பிரதேசத்தில் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடமையாற்றிய சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளங்காணப்பட்டதனையடுத்து அவரது குடும்ப அங்கத்தவர்கள் 48 பேருக்கு நேற்று மாலை கந்தளாய் பிராந்திய சுகாதார பணிமனையில் மிகவும் சுகாதார பாதுகாப்புடன் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கந்தளாய் பிராந்திய சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் அவரது குடும்ப அங்கத்தவர்கள் 08 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.
கந்தளாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அக்போகம பிரதேசத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் அங்குள்ள நிலவரம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்றும் நேற்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அக்போகம கிராமத்தில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, குறித்த நபர் பயணித்த இடங்கள் மற்றும் ஏனைய தொடர்புகள் பற்றிய தகவல்களும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் ஆராயப்பட்டு வருகின்றன.