தபால் மூல வாக்களிப்பு – 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று!

தபால் மூல வாக்களிப்பு – 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நேற்று ஆரம்பமாகிய நிலையில், இரண்டாம் கட்ட வாக்குபதிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளன.

இதற்கமைய சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவையாற்றும் சேவையாளர்கள் இன்றும் நாளையும் வாக்களிக்கவுள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாக ராஜாங்கனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிக்கான வாக்களிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பிரதேச செயலாளர் பிரிவினைத் தவிர்ந்த ஏனைய சகல பகுதிகளிலும் நேற்று முதல் ஏழு நாட்கள் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளன.

அந்த வகையில் நேற்றைய தினம் சுகாதார சேவைகள் அதிகாரிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்றன.

இந்நிலையில், நேற்றைய வாக்களிப்பு வெற்றிகரமாக இடம்பெற்றது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ள அதேநேரம், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய வாக்களிப்பு இடம்பெற்றமையை அவதானிக்க முடிந்ததாக கண்காணிப்பு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

இதேவேளை பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் எதிர்வரும் 16, 17ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியுமெனவும் அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.