இந்திய மீனவரின் சடலம் ஒப்படைப்பு
காரைநகர் கடற்பரப்பில் கடந்த 18ஆம் திகதி உயிரிழந்த இந்திய மீனவரின் சடலம் இன்று (23) காங்கேசன்துறை ஊடாக தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காரைநகர் கோவளம் பகுதிக்குள் 18ஆம் திகதி ஊடுருவிய இந்திய மீனவரின் படகு கடற்படையினரின் படகுடன் மோதியதில் இந்திய மீனவரின் படகு முழுமையாக கடலில் மூழ்கியது.
இதன்போது இரு இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டபோதும் ஒருவர் காணாமல் போயிருந்தார். இவ்வாறு காணாமல் போன இந்திய மீனவரைத் கடற்படையினர் 18 ஆம் திகதி இரவு மற்றும் 19ஆம் திகதிகளில் தேடிய நிலையில், 20 ஆம் திகதி நண்பகல் காணாமல் போன இந்திய மீனவர் இலங்கை கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அவ்வாறு காங்கேசன்துறைக்கு கொண்டுவரப்பட்ட உடலை காங்கேசன்துறைக்கு சென்ற தடயவியல் பொலிசார் மற்றும் நீதிபதி சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
இதன் பிரகாரம் 20 ஆம் திகதி மாலை காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நீரில் மூழ்கியதனால் குறித்த நபர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அதன் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்து சடலத்தை தமிழகம் அனுப்புவதற்கான பணி இடம்பெற்ற போதும் உயிரிழந்த மீனவனுடன் பயணித்த ஏனைய இரு மீனவர்களையும் விடுவிக்குமாறு விடப்பட்ட கோரிக்கை காரணமாக காலதாமதம் ஆனது.
இந்த தாமதம் தமிழக மீனவர்களின் போராட்டங்கள் அதிகரிக்க காரணமானதால் இன்று காலை உயிரிழந்த தமிழக மீனவரின் சடலம் மட்டும் காங்கேசன்துறை ஊடாக இலங்கை கடற்படையினரால் காலை 9 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டு இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சடலம் இன்று பிற்பகல் உயிரிழந்தவரின் உறவுகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.