இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் விடுத்துள்ள கோரிக்கை!

எந்த விதமான எழுத்து மூலமான ஆவணங்களின்றி உங்கள் பாடசாலையின் திறப்புகளை அதிபர்கள் கையளிக்க வேண்டாமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கோரிக்கை விடுத்தார்.

நேற்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆரம்பப் பாடசாலைகளை இலங்கை முழுவதுமாக ஆரம்பிப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு சம்பள முரண்பாட்டை பிரச்சினையை தீர்க்கப்படாததாலேயே தொடர்ச்சியாக இன்றும் நாளையும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தோம். 25 ஆம் திகதி கற்பித்தலை ஆரம்பிப்போம். அந்த வகையில் இன்றைய தினமும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருக்கின்றோம்.

புலனாய்வாளர்களின் பல அச்சுறுத்தல்கள், அரசியல்வாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாம் பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றோம். இலங்கை முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு ஒத்துழைத்த பெற்றோருக்கும் இந்த சமூகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

25 ஆம் திகதி முதல் நாங்கள் பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்கும் தொடர்ச்சியான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் நாங்கள் மாற்று வியூகங்களையும் தொழிற்சங்க போராட்டங்களை தொடர்ந்து மேற்கொள்வோம்.

எந்த விதமான எழுத்து மூலமான ஆவணங்களின்றி உங்கள் பாடசாலையின் திறப்புகளை கையளிக்க வேண்டாம். பாடசாலையின் பொறுப்பை ஒப்படைப்பது தொடர்பாக பல சுற்று நிருபங்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. பாடசாலை பொறுப்பை ஒப்படைப்பது ஒழுங்குவிதிகள் சட்ட நடைமுறைகள் இருக்கின்றன.

சட்டவிரோதமாக பறிமுதல் செய்தால் நீங்கள் எமக்கு முறைப்பாடு செய்யுங்கள். இதற்காக அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை முன்கொண்டு செல்வதற்கு முனைப்பாக இருப்போம். பாடசாலைகளின் முகாமைத்துவத்தை பார்வையிடவும் மேற்பார்வையிடுவதற்குமான ஆற்றல் கல்வி அமைச்சுக்கே உண்டு.

கல்வி அமைச்சு சாராத எந்தவித ஊழியர்களுக்கோ பணியாளர்களுக்கோ பட்டதாரி பயனர்களுக்கோ திறப்பை ஒப்படைப்பது என்பது மிக சட்டவிரோதமானது. இதற்காக நாங்கள் நீதிமன்றம் செல்வோம். ஆகவே, நீங்கள் அச்சப்படாமல் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு முறைப்பாட்டை வழங்க வேண்டும் என்றார்.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-