சுகாதார அறிவுறுத்தல்களை மீறும் மதஸ்தலங்களுக்கு எதிராக நடவடிக்கை!

சுகாதார அறிவுறுத்தல்களை மீறும் மதஸ்தலங்களுக்கு எதிராக நடவடிக்கை!

சுகாதார அறிவுறுத்தல்களை மீறி மக்களைக் கூட்டி மதஸ்தலங்கள் செயற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (07) ஊடகவியலாளருக்கும் சுகாதாரப் பிரிவினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்ததாவது,

நாடு பூராகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதும், வழிபாட்டு தலங்களில் ஒன்று கூடுவதற்கும், உற்சவங்கள் நடத்துவதற்கும் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், நவராத்திரி பூஜைக்காக ஆலயங்கள் சில அனுமதி கோரியிருந்தன. இதன்போது சில ஆலய நிர்வாகத்தினர் ஆலயக் குருக்கள் மற்றும் உபயகாரர் இருவரை வைத்தாவது பூஜை நடத்த அனுமதி வழங்குமாறு கோரியிருந்தனர்.

அதனடிப்படையில் தான் மதகுருவும், உபயகாரர் இருவருடனும் செய்யுமாறு அறிவித்திருந்தோம்.

முறைப்படி அனுமதி வழங்க முடியாது. ஆலய குருக்களுடனும், உபயகாரருடனும் இணைந்து செயவதற்கு சில ஆலயங்கள் இணங்கி அனுமதி எடுத்துள்ளனர். ஆனால், தற்போது நாம் அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளோம்.

ஆலயத்தில் மக்கள் ஒன்று கூடியிருப்பதாக முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் அரசாங்க சுற்று நிருபத்திற்கு அமைவாக குறித்த ஆலயத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவொரு மதம் சார்ந்து சுகாதாரப் பிரிவினர் செயற்படவில்லை. வவுனியாவில் கிறிஸ்தவ மதத் தலங்கள் சிலவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிவாசல் மற்றும் கிறிஸ்தவ மதத் தலங்களை திறப்பதற்கு தினமும் அதன் நிர்வாகத்தினர் வந்து அனுமதி கேட்கிறார்கள். ஆனால் பூட்டப்பட்ட இந்து ஆலயங்களை திறப்பதற்கு அனுமதி கோரி ஆலய நிர்வாகத்தினர் எவரும் வரவில்லை. இருப்பினும், பூட்டப்பட்ட இந்து ஆலயஙகளிலும் ஆலய குருக்கள் சென்று நித்திய பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றோம்.

எனவே, மதத்தலங்களில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி அதிகளவிலான மக்களுடன் வழிபாடுகள் இடம்பெறுவதாக இனங்காணப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.