இந்தோனேசியாவில் இலங்கைக்கான வணிக வாய்ப்பு
இந்தோனேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் யசோஜா குணசேகர கடந்த 16 ஆம் திகதி இந்தோனேசியாவில் உள்ள தெற்கு சுலாவேசி மாகாணத்தின் வணிக சங்கத்தின் நிர்வாகத்துடன் மெய்நிகர் சந்திப்பொன்றில் ஈடுபட்டார்.
மெய்நிகர் சந்திப்பில், இந்தோனேஷியாவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய இலங்கை வர்த்தகப் பொருட்கள், படகு மற்றும் கப்பல் கட்டுமானத் தொழில், மீன்வளம் மற்றும் விவசாயத் துறையில் கூட்டு முயற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து தூதுவர் விழிப்புணர்வுகளை வழங்கினார்.
இரு நாடுகளிலும் சாத்தியமான பங்காளிகளை இணைப்பதற்கான ஒரு வணிக மன்றம் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
வர்த்தக, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் படகு கட்டுமானத் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவிருக்கும் மெய்நிகர் படகு நிகழ்ச்சி 2021 தொடர்பில் மூன்றாவது செயலாளர் (வணிகம்) திருமதி. ஹேஷானி பிரேமதிலக விளம்பரப்படுத்தி, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் மூலம் வெளிநாட்டு விநியோகஸ்த்தர்களை பதிவு செய்வதற்கான அறிவிப்பையும் வழங்கினார்.
இந்தோனேசியாவில் உள்ள தெற்கு சுலாவேசி மாகாணத்தின் வர்த்தக மற்றும் தொழிற்துறை சபை இந்தோனேசியாவின் 4 வது பெரிய நகரமான மாகாசரில் அமைந்துள்ளது. மாகாசர் கிழக்கு இந்தோனேசியாவின் மையமாகும். இந்த மாகாணம் முக்கியமாக கோப்பி, கொக்கோ விழுது, மீன்வள உற்பத்தி மற்றும் தேங்காய் உற்பத்தி போன்ற விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்கின்றது.