கொரோனா அச்சம்: இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு – மேலதிக வகுப்புகளுக்கும் தடை!

கொரோனா அச்சம்: இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு – மேலதிக வகுப்புகளுக்கும் தடை!

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சருக்கும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் இடையில் கல்வி அமைச்சில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த தீர்மானத்தை தனியார், சர்வதேச பாடசாலைகளும் மேலதிக வகுப்புக்களும் பின்பற்றும் என கல்வியமைச்சு எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு மத்திய நிலையங்களாக ஒதுக்கப்பட்டுள்ள பாடசாலைகள் மாத்திரம் குறித்த தினங்களில் திறக்கப்படுவதுடன், அங்கு வாக்களிப்பு பணிகள் இடம்பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களின் பொறுப்பாகும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு அமைவாக சகல கத்தோலிக்க தனியார் பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 17 திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சகல பல்கலைக்கழகங்கள் தொடர்பாகவும் பல்கலைகழங்கள் மானியங்கள் ஆணைக்குழு இன்றைய தினம் கூடி ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.