வர்த்தகர்களுக்கான அபராத தொகையை அதிகரிக்கும் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றுக்கு!

வர்த்தகர்களுக்கான அபராத தொகையை அதிகரிக்கும் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றுக்கு!

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் அறவிடப்படும் அபராதத்தை, 100,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை இந்த திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் அதிகார சபை சட்டம் கடந்த 2003 ஆம் ஆண்டு ஏற்படுத்தபட்ட நிலையில், இதுவரையில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், எதிர்வரும் புதன்கிழமை அதில் முதல் முறையாக திருத்தம் ஒன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோரை பாதுகாப்பதற்காக வெவ்வேறு கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

எனினும், வர்த்தமானி மூலம் விலைகளை கட்டுப்படுத்துவது நடைமுறை ரீதியாக இடம்பெறுவதில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது.

அது உண்மை என்றும், அதனை ஏற்றுக்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அறவிடப்படும் அபராதப் பணம் 1,500 ரூபா முதல் 2,000 ரூபா வரையில் உள்ளமையே இதற்கான காரணமாகும்.

இந்த நிலையில், அந்த அபராதத் தொகையை ஒரு இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்க திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.