நாட்டை மீள திறப்பதாயின் கட்டுப்பாடுகள் அவசியம் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
நாடு முழுவதிலும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டை மீளத் திறப்பதாயின், அது கட்டுப்பாடுகளுடன் இடம்பெற வேண்டும் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டைக்கு பைஸர் தடுப்பூசியை வழங்குவது அரசாங்கத்தின் தீர்மானமாகும் என்று, குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, தங்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய, அந்த தடுப்பூசிகளை குறித்த பிரதேசத்திற்கு அனுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது ஹம்பாந்தோட்டையில் இளைஞர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்படுவதன் மூலம், எதிர்காலத்தில் சிறுவர்களுக்கு இந்த தடுப்பூசியை வழங்க முடியாத நிலை ஏற்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சிறுவர்களுக்கு வழங்குவதற்கான தடுப்பூசிக்காக தற்போது போதுமான கொள்வனவுகளுக்குரிய முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபர் மாதமளவில் 4 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன.
கடந்த முறை இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பு செயலணி கூட்டத்தில், ஜனாதிபதி இது குறித்து கலந்துரையாடல் நடத்தினார்.
குறித்த 4 மில்லியன் தடுப்பூசிகளையும் சிறுவர்களுக்கு வழங்குவதென இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
எனினும், இது குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.