பயங்கரவாதம் மற்றும் கொரோனாவை விட இதுவே மிகவும் ஆபத்தானது! யாழ் கட்டளைத் தளபதி எச்சரிக்கை

பயங்கரவாதம் மற்றும் கொரோனாவை விட இதுவே மிகவும் ஆபத்தானது! யாழ் கட்டளைத் தளபதி எச்சரிக்கை

பயங்கரவாதம் மற்றும் கொரோனாவை விட மிகவும் ஆபத்தானது இந்த பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனை என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் வணிகசூரிய தெரிவித்தார்

இன்றைய தினம் இராணுவத்தினரால் யாழ் குடாநாடெங்கும் பொலிதின் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவகற்றல் செயற்பாடு இடம்பெற்றதோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது இலங்கையை பொறுத்த வரைக்கும் பயங்கரவாதம் மற்றும் கொரோனாவினை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் ஆனால் இந்த பொலித்தீன் பாவனை மற்றும் பிளாஸ்டிக் பாவனையில் இருந்து மக்களை பாதுகாக்கின்ற வேலைத்திட்டத்தில் தற்போது முன்னெடுத்து வருகின்றோம். அது மிகவும் கடினமான விடயம் எனவே நாம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் குறித்த திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம் எனினும் இது தொடர்பில் பொது மக்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் ஏனெனில் நாம் அன்றாடம் நமது வாழ்க்கை முறையில் இந்தபொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பெரும்பாலும் பயன்படுத்துகின்றோம்

முதலில் அதனை நிறுத்த வேண்டும் அதனை நிறுத்தாத பட்சத்தில் எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் எனவே மக்கள் இது தொடர்பில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகரில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் பணி இன்று காலை 7 மணி ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய தலைமையில் இராணுவம், பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து யாழ்ப்பாணம் மாநகரை தூய்மைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் பணி இன்று முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்பாக இடம்பெறும் பிரதான நிகழ்வுடன் நிறைவு பெறவுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரில் காணப்படும் பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுப்பொருள்களை அகற்றி நகரைச் சுத்தப்படுத்தும் நோக்குடன் இந்தப் பணி சுழற்சிமுறையில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்ட இறுதி நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் யாழ்ப்பாண பிரதேச செயலர் கலந்துகொண்டிருந்தனர்.