4 பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

4 பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2 இணைப் பேராசிரியர்கள் உட்பட 4 பேரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தாவரவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான இ. கபிலன் தாவரவியலில் பேராசிரியராகவும், இரசாயனவியல் துறையின் முன்னாள் தலைவரும், இணைப் பேராசிரியருமான திருமதி மீனா செந்தில்நந்தனன் இரசாயனவியலில் பேராசிரியராகவும், தொழிநுட்ப பீடத்தின் பீடாதிபதியும், விவசாய பீடத்தின் முன்னாள் பீடாதிபதியுமான கலாநிதி சிவமதி சிவச்சந்திரன் பயிரியலில் பேராசிரியராகவும், பௌதிகவியல் துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி க. விக்னரூபன் பௌதிகவியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்படுவதற்கே பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று சனிக்கிழமை, துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், மதிப்பீட்டுக்குழுவின் சிபார்சின் அடிப்படையில் பேராசிரியர்கள் நியமனத்துக்கான தேவைப்பாடுகளை நிறைவு செய்தவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் மதிப்பீட்டுக்குழுவின் அறிக்கைகள் என்பன சமர்ப்பிக்கப்பட்டன. மதிப்பீடுகளின் படியும், தெரிவுக் குழுவின் சிபார்சின் அடிப்படையிலும் 4 பேரையும் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பேரவை ஒப்புதல் அளித்ததுள்ளது.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-