மீண்டும் கொரோனா பீதி – யாழில் வழக்கம் போல பொருட்கள் வாங்க முந்தியடிக்கும் மக்கள்!
அந்தாட்டிக்காவில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலே, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாகவும், வர்த்தக நிலையங்களின் முன்பாகவும் நீண்ட வரிசையில் நிற்கும் யாழ்ப்பாண வாசிகள், இன்றும் வதந்தி பரப்பி பொருட்கள் வாங்குவதில் முண்டியடிக்க ஆரம்பித்துள்ளனர்.
நேற்று பெருமளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படடதை தொடர்ந்து, வழக்கம் போல யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் வதந்திகள் பரவ ஆரம்பித்துள்ளது.
மீளவும் லொக்டவுன் அறிவிக்கப்படவுள்ளதாக பரவும் வதந்தியையடுத்து, வர்த்தக நிலையங்களில் மக்கள் பெருமளவில் பொருட்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
கடந்த லொக் டவுன் நேரத்திலும் மக்கள் தேவையற்ற பரபரப்புடன் பெருமளவு பொருட்களை வாங்கிக் குவித்ததில், செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டதுடன், பல வர்த்தகர்கள் பொருட்களின் விலையை உயர்த்தி பகல் கொள்ளை அடித்தனர். யாழ்ப்பாணத்தின் முக்கிய அரிசி ஆலைகள் பல, அரிசி விலையை உயர்த்தி, பொக்கற்றை நிரப்பின.
கொரோனா தொற்றாளர்கள் குறிப்பிட்ட முகாமொன்றிலேயே அடையாளம் காணப்பட்டனர், அதனால் சமூகத்தொற்றாகும் அபாயமில்லையென அரசு அறிவித்துள்ள நிலையிலும், மக்கள் தேவையற்ற பரபரப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.