காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனுக்கு பி.சி.ஆர் பரிசோதனை
வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஞ்ஜீவன் என்ற சிறுவன் நேற்று (06) காலை 8 மணி அளவில் வெட்டுக்காயங்களுடன் வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் அவரின் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட காயத்துடனும் கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் சடலமாக காணப்பட்டுள்ளார். சிறுவனின் மரணம் தொடர்பிலான விசாரணைகனை வவுனியா பொலிஸார் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றையதினம் சிறுவனின் குடும்பத்தினர், சகோதரன், சகோதரனின் நண்பன் ஆகியோரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தினை நேற்று மாலை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிறுவனின் சடலத்திற்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் முடிவுகளின் பின்னரே பிரேத பரிசோதனை இடம்பெறும் என பொலிஸார் தெரிவித்தனர்.