
யாழ். கோண்டாவில் வீடொன்றின் மீது தாக்குல்: ஆயுதங்களுடன் மூவர் கைது!
யாழ்ப்பாணம் - கோண்டாவில் - செல்வபுரம் பகுதியில் வீடொன்றில் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 13 சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோண்டாவில் - செல்வபுரம் பகுதியில் கடந்த 30ஆம் திகதி இரவு 8.30 அளவில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டதுடன், மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.
துண்டிக்கப்பட்டவரின் கை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், சத்திர சிகிச்சைமூலம் மீளப் பொருத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் பிரியந்த லியனகேயின் தலைமையில், பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் வழிகாட்டலில் பிரதான காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில், 19, 23 மற்றும் 25 வயதுடைய சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரிடமும் முன்னெடுத்த விசாரணைகளில், 6 உந்துருளிகளில் பயணித்த 16 பேர் இணைந்து இந்த வன்முறையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
வன்முறையில் ஈடுபடும் குழு ஒன்றிலிருந்து பிரிந்த ஒரு தரப்பினர், மற்றுமொரு குழுவை ஆரம்பித்து அதற்குப் பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, அந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்த பதிவகத்தை தீ வைத்ததாகவும் குறித்த குழுவைச் சேர்ந்த ஒருவரை வாளினால் வெட்டியதாகவும் பிரதான சந்தேக நபர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரிடமிருந்து, 3 கஜேந்திர வாள்களும், 2 சாதாரண வாள்களும், முச்சக்கர வண்டி, உந்துருளிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன. ஏனைய சந்தேக நபர்களைக் கைதுசெய்ய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.