வடக்கில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 2327 kg கஞ்சா போதைபொருள் மீட்பு!

வடக்கில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 2327 kg கஞ்சா போதைபொருள் மீட்பு!

வடக்கில் இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் 2327 kg கஞ்சா போதைபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் போதைப் பொருள் கடத்தல் வடக்கில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு 2096 kg கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் இவ்வருடம் இன்றைய தினம் வரை 2327kg கஞ்சா போதைப் பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது.

எனினும் இது தொடர்பில் சமூக மட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமான ஒரு விடயமாகும்.

இதனை கருத்தில் கொண்டு சிவில் அமைப்புக்கள், மத குருமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் வடக்கு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

ஏனெனில் இளம் பராயத்தை சேர்ந்தவர்கள் அதாவது கல்வி கற்றுக் கொண்டிருக்கும் இளைஞர்கள் கூடுதலாக இந்த போதைப் பொருளுக்கு அடிமையாகி வருவதை அவதானிக்க முடிகின்றது.

இதுதொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் அனைத்து சமூக மட்ட பிரதிநிதிகளுக்கும் உள்ளது.

கடற்படையினரால் பல்வேறுபட்ட விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

அதேபோல சமூகமட்ட அமைப்புகளும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விபரீதம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையை கட்டுப்படுத்த முடியும் என வடக்கு கடற்படை தலைமையகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது