‘மேட்ரிக்ஸ் 4’ ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா
தமிழன் படத்தில் விஜய் ஜோடியாக அறிமுகமாகி இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா பிரபல பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி ஹாலிவுட் பட வாய்ப்புகள் தேடி வந்தார். தற்போது மேட்ரிக்ஸ் படத்தின் நான்காம் பாகத்தில் நடிக்க தேர்வாகி உள்ளார்.
மேட்ரிக்ஸ் ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 1999-ல் லானா வக்காவ்ஸ்கி, லில்லி வக்காவ்ஸ்கி ஆகியோர் இயக்கத்தில் த மேட்ரிக்ஸ் திகில் படம் வெளியானது. படத்தில் இடம்பெற்ற அதிரடி சண்டை காட்சிகளும் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. உலகம் முழுவதும் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
மேட்ரிக்ஸ் படத்தின் மூன்று பாகங்கள் இதுவரை வந்துள்ளன. இவற்றில் கதாநாயகனாக கினு ரீவ்ஸ் நடித்து இருந்தார். த மேட்ரிக்ஸ் 4-ம் பாகத்திலும் அவரே நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்தபோது பிரியங்கா சோப்ராவும் சென்று இருந்தார்.
தற்போது அவரை ஒப்பந்தம் செய்து இருப்பது உறுதியாகி உள்ளது. கினு ரீவ்சுக்கு ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெர்லினில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.