ரணில் இன்று சத்திய பிரமாணம்

ரணில் இன்று சத்திய பிரமாணம்

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காகக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (23) சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக 9 மாதங்களின் பின்னர் அவர் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

இதன்படி, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரேயொரு தேசிய பட்டியல் உறுப்புரிமை மாத்திரம் கிடைக்கப் பெற்றது.

இதற்காக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் பல தடவைகள் ஆழமாக ஆராயப்பட்டன.

எவ்வாறாயினும் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்கவை அதற்காக நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.

நாடாளுமன்ற அமர்வு இன்று (23) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய அமர்வின் ஆரம்ப நிகழ்வாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நேற்று (22) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட 200 பில்லியன் ருபா பெறுமதியான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று (23) இடம்பெறவுள்ளது.