நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம், முருகன் ஆலயம் மீதான தாக்குதல்: 25ஆம் ஆண்டு நினைவுகூரல் இன்று!

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம், முருகன் ஆலயம் மீதான தாக்குதல்: 25ஆம் ஆண்டு நினைவுகூரல் இன்று!

யாழ்ப்பாணம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம் மீதான விமானத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம்  திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் மரணமடைந்தனர்.

அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணைத் தாக்குதல், விமானத் தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தொடர் எறிகணைத் தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், அன்று காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.

இந்தக் குண்டுவீச்சு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி மரணித்ததுடன் 350இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் இந்த நினைவு ஆண்டுதோறும் நினைவு கூரப்பட்டுவரும் நிலையில் இன்று 25ஆவது ஆண்டு நினைவு கூரப்படுகிறது.

இதேவேளை, நவாலி சென்பீற்றர் தேவாலத்தில் நினைவு நாள் அஞ்சலி நிகழ்வை நடத்தும் பொருட்டு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த நிலையில் அந்த மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று நினைவுகூரல் நிகழ்வு தடையின்றி முன்னெடுக்கப்படும் என எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.