பொலிஸார் எனக்கூறி வீதிகளில் நடமாடிய இருவருக்கு நேர்ந்த கதி!

பொலிஸார் எனக்கூறி வீதிகளில் நடமாடிய இருவருக்கு நேர்ந்த கதி!

பொலிஸார் எனத் தெரிவித்து பயணத் தடை உத்தரவை மீறி வீதிகளில் நடமாடிய இருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் இன்று (15) உத்தரவிட்டார்.

அவர்களில் ஒருவர் பொலிஸ் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்று மன்றில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் பயணத் தடையை மீறி நடமாடிய ஒருவரை பொலிஸார் வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். அவர் தான் பொலிஸ் உத்தியோகத்தர் எனத் தெரிவித்ததுடன் பொலிஸ் அடையாள அட்டையின் நிழல் பிரதியையும் பொலிஸாருக்கு காண்பித்துள்ளார்.

வீதித் தடை கடமையில் இருந்த பொலிஸார் சந்தேகம் கொண்டு அவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த போது, ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக அந்த நபர் பொலிஸ் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டது.

அவர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

பொலிஸ் சேவையில் உள்ளதாகத் தெரித்து நன்மையைப் பெற முற்பட்டமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் சந்தேக நபருக்கு எதிராக பொலிஸார் பி அறிக்கை தாக்கல் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த மன்று சந்தேக நபரை வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

அத்துடன், கோப்பாய் பொலிஸ் பிரிவில் இலங்கை பொலிஸ் டி சேர்ட் அணிந்தும், மோட்டார் சைக்கிளில் பொலிஸ் என பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டி பயணித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் என தம்மை போலியாக அறிமுகப்படுத்தி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக சந்தேக நபர் மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று கோப்பாய் பொலிஸாரால் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிவான் சந்தேக நபரை வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.