மக்களின் மேம்பாட்டிற்கான குரலாக ஒலிப்போம் – வேட்பாளர் எம்பி. நடராஜா
நிலையான அரசியல் பொருளாதார சமூக அபிவிருத்தியை பெற்றுக்கொடுப்பதற்கான மக்களின் குரலாக ஒலிப்போம் என அகதேசிய முற்போக்கு கழகத்தின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினரும் சுயேற்சைக்குழு-5 தலைமை வேட்பாளருமான எம்.பி.நடராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நாம் தனித்துவமான முறையில் அக தேசியமுற்போக்கு கழகத்தில் சுயேட்சை குழுவாக போட்டியிடுகின்றோம். வன்னி மாவட்டத்திலே பரந்து வாழ்கின்ற மலையக மக்கள் மற்றும் ஏனைய மக்கள் சார்பாக களம் இறங்கியிருக்கின்றோம்.
தமிழ் தேசிய கட்சிகள் பல இருக்கின்ற நிலையில் எம்மையும் இணைத்து போட்டியிடுவதற்கு எந்த கட்சிகளும் உத்தியோகபூர்வமான முறையில் அழைப்பு விடுக்கவில்லை. அதனால் தனித்து களம் இறங்கியிருக்கின்றோம்.
அந்தவகையில் மக்களின் மேம்பாட்டிற்கான குரலாக நாடாளுமன்றில் ஒலித்து. நம்மவர்களிற்கு மறுக்கப்பட்ட நிலையான அரசியல் பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தியை பெற்றுக்கொடுப்பதற்கு வெற்றிபெறும் அரசுடன் நிபந்தனை அடிப்படையில் இணைந்து செயற்படுவோம்.
பலம்மிக்க மறுக்கப்பட முடியாத சமூகம் நாம் என்பதை உறுதிப்படுத்தி நமது தனித்துவத்தை கட்டிக்காத்து அடுத்த தலைமுறைக்கு ஒப்படைப்பதுடன், நிலையான அரசியல் சக்தியாக எம்மை தக்க வைத்து பலப்படுத்துவோம். எனவே நமக்கு நாமே என்ற அடிப்படையில் எமது மக்கள் அனைவரும் ஒரு ஆசனத்தை பெறுவதற்காக ஒன்று சேரவேண்டும்.
நாம் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோரை, சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.
அதில் எம்மையும் இணைத்து எந்த தேர்தலாக இருந்தாலும் எமது அரசியல் பிரதிநிதித்துவத்தை உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தோம். அந்த வேண்டுகோளிற்கு எந்தவிதமான பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை.
கடந்த பிரதசே சபை தேர்தலில் வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கான ஆதரவினை கூட்டமைப்பு கோரியிருந்தது. நிபந்தனையின்றி எமது உறுப்பினர்கள் ஆதரவளித்தனர்.
ஆனால் ஆட்சி அமைத்தன் பின்னர் அங்கு இருக்கும் தலைவரோ அல்லது எம்மிடம் ஆதரவு கோரியவர்களோ எம்மை திரும்பிகூட பார்க்கவில்லை. அந்த மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு தெரு விளக்கை கூட அவர்கள் போடவில்லை. அது கூட்டமைப்பிற்கு காலம்காலமாக இருக்கின்ற துரோகத்தனத்தின் வெளிப்பாடே“ எனக் குறிப்பிட்டுள்ளார்.