பரபரப்பாக நகரும் அரசியல் திருப்பங்கள்... விஜய் ஆட்சி அமைய நிலவும் தடைகள் விலக வழிகள்
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி அரசு அமைவதற்கான வாய்ப்புகளை தமிழக மக்கள் தேர்தல் முடிவின் மூலம் வழங்கி உள்ளார்கள். அரசியலுக்கு வந்து சந்தித்த முதல் தேர்தலிலேயே த.வெ.க. 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனவே த.வெ.க. தலைமையில்தான் தமிழக மக்கள் எதிர்பார்த்த கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்.
ஆனால் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் விஜய் ஆட்சி அமைப்பதும் தள்ளி போகிறது. தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார். ஆட்சி அமைத்த பிறகு பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ளலாம் என்று த.வெ.க. கருதிய நிலையில் கவர்னர் இதுவரை அழைக்கவில்லை. அவர் பெரும்பான்மைக்கான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
தேர்தல் கமிஷன் தேர்தலை நடத்தி முடித்து கடிதத்தையும் கவர்னரிடம் வழங்கிவிட்டது. கடிதம் கிடைக்க பெற்ற 15 நாட்களுக்குள் புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை கவர்னர் மேற்கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் த.வெ.க.வுக்கு காங்கிரசின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்ததை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் ‘மேஜிக்’ நம்பரான 118-ஐ தொடாததால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து தடை ஏற்பட்டுள்ளது. கவர்னர் தனிப்பெரும் கட்சியான த.வெ.க.வை ஆட்சி அமைக்க இன்னும் அழைக்காதது சரியா? அவருக்கு இருக்கும் அதிகாரங்கள் என்ன? என்பது பற்றியும் விவாதங்கள் எழுந்துள்ளன.
அவையில் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கவர்னர் கருதினால் கட்சியின் அல்லது கூட்டணியின் தலைவரைப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் முதலமைச்சராக பதவி ஏற்க அனுமதிக்கலாம். அவர்கள் குறிப்பிட்ட காலவரைக்குள் தங்களது பெரும்பான்மையை நிருபிக்க அவகாசம் வழங்க கவர்னருக்கு உரிமை உண்டு.
யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், மரபுகள், முன்னுதாரணங்கள், சர்க்காரியா கமிஷன் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் அதிக எண்ணிக்கை பலமுள்ள கட்சி அல்லது கூட்டணிக்குத் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும். ஆனால், அது குதிரை பேரத்துக்கும், கட்சிப் பிளவுகளுக்கும் வழிகோலுமானால் அதைத் தவிர்க்கும் உரிமையும் கவர்னருக்கு இருக்கிறது.
கவர்னரின் அடிப்படைக் கடமை, நிலையான ஆட்சி அமைக்கப்படுவதுதான். அதற்கேற்ப முடிவுகள் எடுக்கும் உரிமையை அரசியல் சாசனம் கவர்னருக்கு வழங்குகிறது. சட்டப்பேரவை உறுப்பினர் அல்லாத, எந்தக் கட்சியையும் சாராத ஒருவரால் நிலையான ஆட்சியை வழங்க முடியும் என்று கவர்னர் கருதினால் அவரை முதலமைச்சராக நியமித்து, குறிப்பிட்ட கால அளவில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்கும் உரிமையும் கவர்னருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த தடைகள் விலகுவது எப்போது? அது தீர்வதற்கான வழிகள்தான் என்ன? என்பது பற்றி காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் தணிகாசலம் கூறியதாவது:-
முதல்முறையாக கூட்டணி அரசு அமைக்கும் வாய்ப்பு மக்களால் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் 113 எம்.எல்.ஏ.க்கள் பலத்துடன் இருக்கும் த.வெ.க.வுக்கு கூடுதலாக 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் தேவை. விடுதலை சிறுத்தைகள் மற்றும் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவையும் அவர் கோரி இருக்கிறார். அந்த 2 கட்சிகளும் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் 119 எம்.எல்.ஏ.க்கள் பலம் கிடைத்து விடும்.
இதில் யாராவது ஆதரவு அளிக்காவிட்டால் 117 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருக்கும். அப்படியானால் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சமபலத்தில் இருக்கும். அதே நேரம் ஒரு எம்.எல்.ஏ. பதவி சபாநாயகராக மாறிவிடுவதால் ஆட்சி அமைக்க முடியாது.
ஆனால் அப்படி ஒரு முடிவை விடுதலை சிறுத்தைகளும், கம்யூனிஸ்டு கட்சிகளும் எடுக்காது. ஜனநாயகத்தை பாதுகாப்பதா? கூட்டணி தர்மத்தை பாதுகாப்பதா? என்ற கேள்வி வரும் போது ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான முடிவைதான் எடுப்பார்கள்.
அடுத்ததாக இப்போதைக்கு ஆட்சி அமைக்க விஜய்யை கவர்னர் அனுமதிக்கலாம். அதே நேரம் குதிரை பேரம் நடப்பதற்கான வாய்ப்புகள் பற்றியும் கவர்னர் ஆராயவும் வாய்ப்பு உண்டு. இதற்கு முன்பு வித்யாசாகர் கவர்னராக இருந்த போது சசிகலாவுக்கு ஆட்சி அமைக்க அனுமதி தரவில்லை. அதற்கு காரணம் அவர் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தது.
இப்போதைய நிலையில் ஜனநாயகத்தில் நிலையான ஆட்சி உருவாக வேண்டும். குதிரை பேரங்கள் தலைதூக்க கூடாது என்று கருதினால் விடுதலை சிறுத்தைகளும், கம்யூனிஸ்டு கட்சிகளும் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பா.ம.க.வுக்கும் இந்த விஷயத்தில் கடமை இருக்கிறது. விஜய் கட்சி ஆரம்பிக்கும் போதே கூட்டணி மந்திரிசபைதான் அமைக்கப்படும் என்று தெளிவுப்படுத்தி இருக்கிறார். எனவே மற்ற கட்சிகளும் இந்த விஷயத்தில் நிச்சயமாக பரிசீலித்து நல்ல முடிவை எடுக்க வாய்ப்புள்ளது. ஆட்சியில் பங்கெடுப்பது நிபந்தனைகளை விதிப்பது போன்ற சில விஷயங்களைதான் அந்த கட்சிகள் பரிசீலித்து வரும். அது நிறைவடைந்ததும் ஆதரவு வழங்கி விடுவார்கள். எனவே விஜய் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அடுத்ததாக சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்படும். அதிலும் அவர் வெற்றி பெற வேண்டும். அதற்கு அரசியல் விளையாட்டில் எத்தனையோ நகர்வுகள் இருக்கின்றன. இப்போதே அ.தி.மு.க.வில் பலர் விஜய்க்கு ஆதரவாக மாறலாம் என்ற கருத்து நிலவுகிறது. அதனால்தான் அவர்களை தங்கும் விடுதியில் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.
அவர்கள் நேரடியாக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது அல்ல. சட்டமன்றத்தில் வாக்குப்பதிவு நடக்கும் போது அ.தி.மு.க.வை சேர்ந்த குறைந்தபட்சம் 25 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்கு வராமல் இருந்தாலே போதும் விஜய் ஆட்சி பெரும்பான்மையை பெற்று விடும்.
எனவே அரசியல் களத்தில் சில நகர்வுகள் பரபரப்பை ஏற்படுத்தினாலும் ஆதரவு அளிக்கும் கட்சிகள் சில எதிர்பார்ப்புகள், சில நிபந்தனைகளுடன் பேசிக் கொண்டு இருப்பதால்தான் ஆதரவு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவே நான் கருதுகிறேன். இவைகளெல்லாம் ஒரு முடிவுக்கு வரும். புதிய ஆட்சி விரைவில் அமையும்.
அதேநேரம் இந்த நடைமுறை சிக்கல்களை சாக்காக கொண்டு புதிய ஆட்சி அமைய விடாமல் முடக்கி மீண்டும் ஒரு தேர்தலை திணிப்பதை மக்களும் ஏற்க மாட்டார்கள். ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள கட்சிகளும் அதை ஏற்காது.
இதற்கிடையில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகள் தரப்பிலும் ஆட்சி அமைப்பதற்கான வழியையும் தேடுகிறார்கள் என்பது சரியாக இருக்காது. அப்படி ஒரு முடிவை அந்த கட்சிகள் தேடினால் ஜனநாயகத்தில் நீங்கள் மட்டும்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டுமா? ஆட்சி, அதிகாரம் மட்டும்தான் உங்கள் குறிக்கோளா? ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டாமா? இத்தனை நாட்களும் ஜனநாயகம் என்ற போர்வையில் இரு கட்சிகளும் மக்களை ஏமாற்றிதான் வந்திருக்கின்றன என்ற அபிப்ராயமும் மக்கள் மத்தியில் ஏற்படும். அதற்கு இரு கட்சிகளும் இடம் கொடுக்காது என்று நினைக்கிறேன்.