பிரான்ஸ் கடற்படையின் 700 துருப்பினர்கள் இலங்கை வருகை

பிரான்ஸ் கடற்படையின் 700 துருப்பினர்கள் இலங்கை வருகை

இலங்கை மற்றும் பிரான்சிற்கும் இடையிலான இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக பிரான்ஸ் கடற்படையின் சுமார் 700 துருப்பினர்கள் இன்று (07) இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

டோனியர் மற்றும் சர்குஃப் ஆகிய கப்பல்கள் மூலம் கடந்த 3 மாதங்களாக கடற்பயணம் மேற்கொண்ட அவர்கள் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஊடாக இன்று (07) இலங்கை வந்தடைந்தனர்.

அவர்கள் பாரம்பரிய இசைக்குழுவின் ஊடாக வரவேற்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல்கள் அதிநவீன போர் உபகரணங்களுடன் உலங்கு வானூர்தி தரையிறங்குவதற்கான வசதிகளை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

200 மீற்றரை விட அதிக நீளமுடைய இந்த போர் கப்பல்கள் கடலில் இருந்து தரைவழி தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கவுள்ள பிரான்ஸ் கடற்படையினர், சீகிரியா, அநுராதபுரம், மின்னேரியா, யால மற்றும் உடவளவை சரணாலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

உயிர் பாதுகாப்பு குமிழி முறைமையின் கீழ் அவர்கள், நாட்டினுள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சினால், சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் கடற்படையினருக்காக யால தேசிய சரணாலயத்தை திறப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் கடற்படையினரின் சுற்றுலாபயணம் ஊடாக மாத்திரம் இலங்கைக்கு 125 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட முடியும் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் யால தேசிய சரணாலயம் உள்ளிட்ட நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து சரணாலயங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் கடற்படையினருக்காக மாத்திரம் யால சரணாலயம் நாளை (08) திறப்பது தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிடுவதாக யாலகம ஜீப் வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.