சமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்களிற்கு வாக்களியுங்கள் – சிவசேனை

சமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்களிற்கு வாக்களியுங்கள் – சிவசேனை

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களிற்கும் சமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்களிற்கும் வாக்களிக்குமாறு சிவசேனை அமைப்பின் வன்னிமாவட்ட இணைப்பாளர் அ. மாதவன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தமது வாக்குகளை புதிய வேட்பாளர்களாக இருப்பவர்களிற்கும் இளைஞர்களிற்கும் அளிக்குமாறு கேட்டுகொள்கிறோம். இந்த வருடத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்ற நோக்கோடு வாக்களித்தால் அது சிறப்பாக இருக்கும்.

அத்துடன் ஒவ்வொருவரும் தங்களது வாக்குகளை கட்டாயம் அளிக்கவேண்டிய தேவைப்பாடுள்ளது. அது எமது உரிமையாக இருக்கிறது. அந்த வாக்கை நாம் நிச்சயம் பயன்படுத்தவேண்டும்.

நாம் எந்த கட்சிகளையும் சுட்டிகாட்டி முரன்பாடு எதனையும் முன்னெடுக்கவில்லை. ஒரு கட்சியின் பெயரையும் குறிப்பிடவில்லை.

ஆனால் வாக்களிக்கும் போது சமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்கள் இந்த நாட்டிலே இருக்க கூடிய பிரச்சனைகளை நிறைவு செய்யகூடியவர்களிற்கு வாக்கினை அளிக்க வேண்டும்.

குறிப்பாக காணாமல் போனவர்கள் நீண்டகாலமாக போராடுகின்றார்கள். எனவே இவ்வாறான தீர்க்கப்படமுடியாத பிரச்சனைகளிற்கான தீர்வை எல்லாம் பெற்றுகொடுக்கும் நோக்கோடு இருக்ககூடியவர்களிற்கும், சமூகத்தின் பொருளாதாரத்தை எட்டி எழுப்ப கூடியவர்களிற்குமே வாக்களிக்கவேண்டும். அது யார் என்று மக்களே தீர்மானிக்கவேண்டும்.

குறிப்பாக இளைஞர்கள் துடிதுடிப்பானவர்கள். எந்த விடயத்தையும் துணிவுடன் செய்யகூடியவர்கள், தங்களுடைய பேச்சுதிறமைகளின் மூலம் நாடாளுமன்றில் பேசி மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யகூடிய நிலையில் அவர்கள் இருப்பார்கள்.

அத்துடன்  மன்னார் மாவட்டத்தில் சைவமக்கள் கட்சி சுயேட்சையாக இம்முறை தேர்தலில் களம் இறங்கியிருக்கிறது. மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை அந்த சைவமக்கள் கட்சி நிச்சயமான தேவையாக இருக்கிறது. எதிர்காலங்களில் ஏனைய மாவட்டங்களிலும் அந்த விடயங்கள் தொடர்பாக சிந்திக்கப்படும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.