லடாக் எல்லையிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் சீனப் படைகள்

லடாக் எல்லையிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் சீனப் படைகள்

லடாக் எல்லையில் இருந்து சீனப் படைகள் தொடர்ச்சியாக வெளியேறி வருவதுடன், அங்கு அமைத்த கூடாரங்களையும் அகற்றி வருவதாக எல்லைப்புற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் சீன இராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் 15ஆம் திகதி இருதரப்பு இராணுவத்துக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது.

இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும் சீனா தரப்பில் சுமார் 35 பேரும் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் இருதரப்பும் படைகளை குவித்து வந்தன. எனவே இருநாட்டு எல்லையில் போர் பதற்றமும் அதிகரித்தது.

இதற்கு மத்தியில் அங்கு பதற்றத்தை தணித்து அமைதியை நிலைநாட்டுவதற்காக இருதரப்பும் பேச்சுவார்த்தைகளையும் தொடர்ந்தன.

இந்த பேச்சுவார்த்தைகளின்போது, இரு தரப்பிலும் படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி விரைவில் முடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் இருந்து இரு நாடுகளும் தங்கள் படைகளை எல்லையில் இருந்து திரும்பப்பெறும் நடவடிக்கைகளை ஆரம்பித்தன.

அதன்படி கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடந்த ரோந்து பாயிண்ட் 14, 15 மற்றும் 16ஆவது நிலைகளில் இருந்து சீன படைகள் பின்வாங்கி சென்றன. மேலும் ஹாட்ஸ்பிரிங், கோக்ரா ஆகிய பகுதிகளிலும் படை விலக்கல் நடவடிக்கைகள் தொடங்கின.

இந்த பணிகள் 2ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தன. சீன படைகள் கோக்ரா மற்றும் ஹாட்ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து கணிசமான அளவுக்கு திரும்பிச் சென்றன. இதன்போது, அவர்கள் அங்கு அமைத்திருந்த தற்காலிக கூடாரங்களையும் அகற்றி சென்றதாக எல்லைப்புற வட்டாரங்கள் தெரிவித்தன.

இதைப்போல சீன இராணுவம் ஊடுருவி இருந்த பங்கோங் சோ ஏரி பகுதியில் இருந்தும் சீன படைகள் குறைவான எண்ணிக்கையில் தொடர்ந்து வெளியேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவைப்போலவே இந்தியாவும் எல்லையில் இருந்து படைகளை விலக்கி வருகிறது. அதன்படி இந்திய வீரர்களும் 2 கி.மீ. தொலைவுக்கு பின்வாங்கி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் சீன படைகளின் மீளப்பெறும் நடவடிக்கை குறித்தும் இந்திய வீரர்கள் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் எல்லையில் மிகுந்த கவனத்துடன், இருப்பதாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு முதற்கட்ட படை விலகல் நிறைவடைந்தபின் இரு தரப்பும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளன. இந்த பேச்சுவார்த்தை இந்த வார இறுதியில் நடத்தப்படும் என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.