யாழ் பொதுநூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு!

யாழ் பொதுநூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு!

யாழ்ப்பாண பொதுநூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு, வன்முறைக் குழுவொன்றினால் நூலகம் தீயூட்டப்பட்டது.

யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது.

அதன்போது அங்கிருந்த பல பாரம்பரிய நூல்கள் தீயினால் அழிவடைந்தன.

யாழ்ப்பாண நூலகம் 1933 ஆம் ஆண்டிலிருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது.

முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் மக்களின் ஆதரவுடன் அது வளர்ச்சியடைந்தது.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்து கிடைக்கப்பெற்ற நூல்கள், நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பழமையான பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

1981 ஆம் ஆண்டு தீயூட்டி எரிக்கப்பட்டதன் பின்னர், 2004 ஆம் ஆண்டில் நூலகம் புனரமைக்கப்பட்டு மீளத் திறக்கப்பட்டது.

தற்போது யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் 125,000 நூல்கள் உள்ளதாக நூலகத்தின் பிரதம நூலகர் சுதந்தி சதாசிவமூர்த்தி தெரிவிக்கிறார்.

2016 ஆம் ஆண்டு நூலகம் கணினிமயப்படுத்தப்பட்ட பின்னர், பதிவுசெய்யப்பட்ட வாசகர்களின் எண்ணிக்கை 11,400 ஆக உள்ளது.

1981 ஆம் ஆண்டு முதல் வெளியான பல பத்திரிகைகளின் பிரதிகள் ஆவணமயப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றை மின்னிதழாக கணினிமயப்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்று முற்பகல் 9.30 அளவில், மாநகர முதல்வர் தலைமையில், நூலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற உள்ளதாக நூலகத்தின் பிரதம நூலகர் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவல் காரணமாக இந்த நிகழ்வு, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பொது நூலகத்தின் தற்போதைய நிலை குறித்து, நூலகத்தின் பிரதம நூலகர் சுதந்தி சதாசிவமூர்த்தி எமது செய்திச் சேவையிடம் தகவல்களை பகிர்ந்துகொள்கிறார்.