இந்தியாவின் தடுப்பூசி ஏற்றுமதி தடையால் 91 நாடுகளுக்கு பாதிப்பு!

இந்தியாவின் தடுப்பூசி ஏற்றுமதி தடையால் 91 நாடுகளுக்கு பாதிப்பு!

இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசிகள் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதால், 91 நாடுகளுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

போதியளவு தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால், ஆபிரிக்க நாடுகள் மட்டுமன்றி, இந்திய திரிபு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி கலாநிதி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் அஸ்ட்ராசெனகா நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட சட்டரீதியான உடன்படிக்கைக்கு அமைய, கொவெக்ஸ் வசதியின் ஊடாக, 2020ஆம் ஆண்டு மாத்திரம் 400 மில்லியன் தடுப்பூசிகள் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டது.

பல ஆபிரிக்க நாடுகளில், தமது மக்கள் தொகையில் 0 தசம் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசிகள் ஏற்றப்படுள்ளதாக சுட்டிக்காட்டிய கலாநிதி சௌமியா சுவாமிநாதன், குறைந்தது, அந்த நாடுகளின் அனைத்து சுகாதார பணிக்குழாமினருக்கேனும் தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசிகளின் சமமற்ற விநியோகம் தொடர்ந்தால், சில நாடுகள் வழமைக்கு திரும்பினாலும், ஏனைய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் காணப்படும் கொரோனா பரவல் நிலையால், தமது சொந்த பிரஜைகளுக்கேனும் தடுப்பூசி செலுத்துவதில் தோல்வி அடைந்துள்ள அந்த நாடு, இந்த வருடம் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி வரை 66.3 மில்லியன் தடுப்பூசிகளை தமது நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக கலாநிதி சௌமியா சுவாமிநாதன சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் வரை பிரித்தானியா, 150 மில்லியன் தடுப்பூசிகளை முன்பதிவு செய்துள்ளதுடன், அவற்றில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 99 மில்லியன் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளும் அடங்கியுள்ளன.

அத்துடன், அமெரிக்காவும் கடந்த ஓகஸ்ட் மாதம் வரை 400 மில்லியன் தடுப்பூசிகளை முன்பதிவு செய்துள்ளது.

இந்தியா மாத்திரமன்றி, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு முன்னர், பல நிறுவனங்களிடம் தடுப்பூசிகளுக்காக முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், தற்போதைய நிலையில் மாற்று வழி இல்லாததால், இந்தியா இந்த வருட இறுதியில் தடுப்பூசி ஏற்றுமதி நடவடிக்கையினை மீளஆரம்பிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.