யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும்

யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும்

யாழ்ப்பாணத்தில் கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள்  நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் எமது செய்தி சேவைக்கு இன்று காலை உறுதிப்படுத்தினார்.

இதுதொடர்பான முக்கிய கூட்டமொன்று நேற்று யாழ்ப்பாணம் - பண்ணையில் உள்ள மாவட்ட சுகாதார திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சீனோபாம் தடுப்பூசிகளில் 50,000 தடுப்பூசிகள் யாழ்ப்பாண மாவட்டத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.

அவை அனைத்தும் இன்றைய தினம் (29) யாழ்ப்பாணம் மாவட்டத்தை சென்றடையவுள்ளன.

 இம்மாவட்டத்தில் உள்ள சுகாதார வலயங்களில் கொவிட் அச்சுறுத்தல் மிக்க பகுதிகளில் அதிகபடியாகவும், கொவிட் அச்சுறுத்தல் குறைந்த பகுதிகளில் குறைந்த அளவிலும் என்ற வகையில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
தற்போது கொவிட் தடுப்பூசிகள் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வழங்கப்படுகின்றன.

நாளை யாழ்ப்பாணத்திலும் இரத்தினபுரியிலும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன.