
யாழ் மருத்துவர்களின் கைப்பேசிகளை திருடிய இருவர் கைது
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்களின் அலைபேசிகளைத் திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய், சுதுமலையைச் சேர்ந்த 22, 24 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களின் அலைபேசிகள் திருட்டுப் போவதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
அது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் இன்று அவர்களது வீடுகளில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் திருடப்பட்ட 7 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையின் போது, மருத்துவர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் தமது அலைபேசிகளை சார்ஜ் செய்ய வைக்கும் போது சந்தேக நபர்கள் இருவரும் நூதமாகத் திருடி வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.