தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு முதல் உயிரிழப்பு....! மதுரையில் எகிறும் பாதிப்பு...!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு முதல் உயிரிழப்பு....! மதுரையில் எகிறும் பாதிப்பு...!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் வெல்டிங் பட்டரை உரிமையாளர் சவுந்தரராஜன். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இவர்  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இவர் சிகிச்சை பலனில்லாமல் இன்று உயிரிழந்தார்.

இதுகுறித்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் உஷா கிம் கூறியிருப்பதாவது,

ஒரே நாளில்  மதுரையில் 50 நபர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களை இந்நோய் எளிதாக தாக்குகிறது. இதில் சில நபர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று வந்தபின்பு தான் கொரோனா பாதிப்பு என்பது உறுதியாகிறது. ஆண்டுக்கு 10 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படும் என்ற நிலையில், தற்போது கொரோனா பாதிப்பால்  வாரத்திற்கு 10 பேருக்கு இந்நோய் தாக்கி வருகிறது. இந்த நோய் தாக்கிய ஆரம்பத்திலே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும், இல்லையெனில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக என அவர் கூறியுள்ளார்.