
இலங்கையில் முதன்முறையாக பெருமளவான கோவிட் தொற்றாளர்கள்
இலங்கையில் முதன்முறையாக ஒரு நாளில் பெருமளவான கோவிட் தொற்றாளர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் மாலை ஆறு மணி வரையில் 3,051 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150,771 ஆக அதிகரிக்கின்றது.
கடந்த மாதம் தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் பரவிய மூன்றாவது அலையின் தொற்றாளிகளின் எண்ணிக்கை 50,000 ஐத் தாண்டியுள்ளது.
தொற்றுநோயியல் பிரிவின் தகவல்படி ஏப்ரல் புத்தாண்டு முதல் 50,234 நோயாளிகள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அடுத்த வாரங்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பேலியகொட மற்றும் துறைமுக கொத்தணியைத் தொடர்ந்து இலங்கையில் பதிவான இரண்டாவது பெரிய கொத்தணி தொற்று புத்தாண்டு கொத்தணி ஆக கருதப்படுகிறது.
இலங்கையில் அண்மைக்காலமாக நாளாந்தம் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் மூவாயிரத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.