சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் – ராமதாஸ்

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் – ராமதாஸ்

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த  கட்டுப்பாடுகளை  முழுமையான கடைப்பிடிக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில், இது தொடர்பில் ராமதாஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “சென்னையில்  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவது  ஆறுதல் அளிக்கிறது. அதே நேரத்தில்  இது கொண்டாடுவதற்கான தருணமல்ல.

கொரோனா ஒழிப்பில்  இது  மிகச் சிறிய முன்னேற்றம் தான் என்பதை மனதில் வைத்து  கட்டுப்பாடுகளை முழுமையாகவும், கடுமையாகவும் கடைப்பிடிக்க வேண்டும்.

சென்னையில்  கொரோனா பரவல் அளவு  சற்று குறைந்திருப்பதற்கான காரணங்களில் மிக மிக முக்கியமானது  15 நாட்களாக அமுலில் இருந்த  முழு ஊரடங்கு தான்.

முக கவசம் அணியாத வாடிக்கையாளர்களை  கடையில் நுழைய  வணிகர்கள் அனுமதிக்கக் கூடாது. முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை  முக கவசம் அணியும்படி அறிவுறுத்த வேண்டும். கடைகளில் வணிகர்கள்  முக கவசம் அணியாமல் இருந்தால்  அணியும் படி கட்டாயப்படுத்த வேண்டும்.

இந்த எளிமையான விதிகளை அனைவரும் கடைப்பிடித்து  கொரோனாவை வீழ்த்தும்  அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.