யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு கொவிட் தொற்று உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு கொவிட் தொற்று உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொவிட் -19 தொற்று நோயினால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட் -19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.

வடமராட்சி உடுப்பிட்டியைச் சேர்ந்த 88 வயதுடைய முதியவரே உயிரிழந்தவராவார். முதியவர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பயனளிக்காது இன்று பிற்பகல் 3 மணிக்கு அவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பும் காரணம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிக்கையிடப்பட்டுள்ளது.

முதியவரின் சடலம் நாளை யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்படவுள்ளது.