
'இரவில் வந்த போன் கால்! விடிய விடிய அலைந்து, 22 பேர் உயிரைக் காப்பாற்றிய சோனு சூட்!'
கொரோனா நோயாளிகள் 22 பேர் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர் என்று இரவில் வந்த தகவலை தொடர்ந்து நடிகர் சோனு சூட் இரவு முழுவதும் விழித்திருந்து தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்துகொடுத்து 22 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்
நடிகர் சோனு சூட் எங்கு யார் கஷ்டப்பட்டாலும் உதவி செய்வதில் எப்போதும் முன்னிலையில் இருக்கிறார். அதுவும் கடந்த ஆண்டு கொரோனா தொடங்கியதிலிருந்து அவரது சேவை பெரிய அளவில் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தற்போது பெங்களூரு கடுமையான கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அரக் ஹாஸ்பிட்டல் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் நேற்று திடீரென ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.
பாலிவுட் நடிகர் சோனு சூட்
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இரண்டு கொரோனா நோயாளிகள் உயிரிழந்துவிட்டனர். மேலும் ஆக்ஸிஜன் இல்லாவிட்டால் மற்ற நோயாளிகளும் உயிரிழக்கும் அபாயம் இருந்தது. மருத்துவமனை தரப்பில் போன் மூலம் தெரிந்தவர்கள் பலரிடமும் கேட்டனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. நடிகர் சோனு சூட் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவி செய்வதாக கேள்விப்பட்டு அவரைத் தொடர்பு கொள்ள முயன்றனர். சோனு சூட் கொரோனா காலத்தில் உதவிசெய்ய 'சோனுசூட் சாரிட்டி பவுண்டேசன்' என்ற தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தன்னார்வலர்கள் அதிகமானோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த குழுவில் இடம்பெற்றிருந்த இன்ஸ்பெக்டர் சத்யநாராயண் என்பவருக்கு மருத்துவமனையில் இருந்து இது தொடர்பாக அழைப்பு வந்தது. உடனே சத்யநாராயண் நடிகர் சோனுசூட்டை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.வந்த தகவல் உண்மையா என்பது குறித்து சோனுசூட் விசாரித்தனர். தகவல் உண்மை என்று தெரிந்தவுடன் சோனு சூட் அதிரடியாக களத்தில் இறங்கினார்.
இரவு முழுவதும் விழித்திருந்து தனக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் போன் செய்து ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு ஏற்பாடு செய்தார். முதல் கட்டமாக உடனே ஒரு சிலிண்டர் ஏற்பாடு செய்து கொடுத்தனர். அடுத்த சிறிது சில மணி நேரத்தில் மேலும் 15 சிலிண்டர்களை சோனுசூட்டும் அவரது அணி உறுப்பினர்களும் சேர்ந்து ஏற்பாடு செய்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதன் மூலம் 22 கொரோனா நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. இது குறித்து சோனு சூட் கூறுகையில், "இன்ஸ்பெக்டர் சத்யநாராயணிடமிருந்து போன் வந்தவுடன் அத்தகவல் உண்மைதானா என்பதை உறுதி செய்து கொண்டு உடனே பணியில் இறங்கினோம். இரவு முழுவதும் வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆக்ஸிஜனை ஏற்பாடு செய்து நோயாளிகளை காப்பாற்றவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டோம். ஆக்ஸிஜன் கிடைக்க தாமதமானால் மேலும் நோயாளிகள் இறக்கும் அபாயம் இருந்தது. பல உயிர்களை காப்பாற்ற உதவிய அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனது அணியினரின் இச்செயலால் மேலும் மேலும் இது போன்ற உதவிகளை செய்யவேண்டும் என்று விரும்ப தோன்றுகிறது. இரவு முழுவதும் என்னுடன் விழித்திருந்து எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார். அவரது செயலுக்காக மருத்துவமனை நிர்வாகமும், கொரோனா நோயாளிகளும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.