
ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி வீரர் விருதிமான் சகாவுக்கு கொரோனா பாதிப்பு
8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கி ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடந்து வருகிறது. தொடக்கத்தில் சென்னை, மும்பையில் நடந்த இந்த ஆட்டம் தற்போது டெல்லி, ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடக்க இருந்த 30-வது லீக் ஆட்டத்தில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத இருந்தன.
இந்த சூழலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனை முடிவில் உறுதியானது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 2 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான எல்.பாலாஜி, அந்த அணியின் பஸ் கிளீனர் ஆகியோருக்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனைத்தொடர்ந்து கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளின் வீரர்கள் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஓட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அத்துடன் அவர்களுக்கு தினசரி கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி வீரர் விருதிமான் சகாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று இரவு டெல்லியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி மோத இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.