தொற்றாளர்களின் அதிகரிப்பால் வைத்தியசாலைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை!

தொற்றாளர்களின் அதிகரிப்பால் வைத்தியசாலைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை!

ஏப்ரல் மாதத்தின் ஆரம்பம் முதல் மே மாதத்தின் ஆரம்பம் வரையான குறுகிய காலப்பகுதியில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் கொவிட் - 19 நோயாளர்களின் எண்ணிக்கை 11,000 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் முதலாம் திகதி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2, 731 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் கொவிட் - 19 நோயாளர்களின் எண்ணிக்கை 13, 824 ஆக காணப்படுகிறது. தற்போதைய நிலையில் வைத்தியசாலைகள் கொவிட் - 19 தொற்றாளர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்தார். கடந்த நாட்களில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமை காரணமாகவே சிகிச்சை நிலையங்களில் படுக்கைகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் மேலும் சில சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. எனவே, தொற்றுறுதியான நிலையில் வீடுகளில் உள்ளவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்ல முடியும். எதிர்வரும் நாட்களில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் அதற்கு தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.