கடந்த ஆண்டில் பெருந்தோட்டத்துறை பணிப்புறக்கணிப்பு அதிகரிப்பு

கடந்த ஆண்டில் பெருந்தோட்டத்துறை பணிப்புறக்கணிப்பு அதிகரிப்பு

பெருந்தோட்டத் துறையில் இடம்பெற்ற பணிப்புறக்கணிப்புகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக, 2019 உடன் ஒப்பிடுகையில் 2020 ஆண்டில் பணிப்புறக்கணிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 2020ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டள்ளது.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்புகள் காரணமாக, இழக்கப்பட்ட மனித நாட்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் வீழ்ச்சியடைந்தது.

இதற்கமைய, பெருந்தோட்டத்துறை மற்றும் ஏனைய தனியார் துறைக் கைத்தொழில்கள் இரண்டிலும் இடம்பெற்ற பணிப்புறக்கணிப்புகள் காரணமாக இழக்கப்பட்ட மனித நாட்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இழக்கப்பட்ட மனித நாட்களின் மொத்த எண்ணிக்கை, 2019இன் உடன் ஒப்பிடுகையில் 2020 இல் 59.7 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தது.

ஏனைய தனியார் துறைக் கைத்தொழில்களில், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட பணியாட்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக, பணிப்புறக்கணிப்புகளில் ஈடுபட்ட பணியாட்களின் எண்ணிக்கை 2019 உடன் ஒப்பிடுகையில் 2020 இல் 19.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது.

எனினும், பெருந்தோட்டத் துறையில் பணிப்புறக்கணிப்புகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக, 2019 உடன் ஒப்பிடுகையில் 2020 இல் பணிப்புறக்கணிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

2019 இல் பெருந்தோட்டத் துறையில் இடம்பெற்ற 9 பணிப்புறக்கணிப்புகளில், 1,981 பேர் பங்கேற்றுள்ளனர்.

இதன் காரணமாக, 28,363 மனித நாட்கள் இழக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 2020 இல் 13 பணிப்புறக்கணிப்புகளில், 1,936 பேர் பங்கேற்றுள்ளனர்.

இதன் காரணமாக, 9,375 மனித நாட்கள் இழக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் 2020ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.