சுதந்திரத்துக்கு பின்னர் இலங்கையில் அதிகூடிய பொருளாதார மந்தம் கடந்த ஆண்டில் பதிவானது

சுதந்திரத்துக்கு பின்னர் இலங்கையில் அதிகூடிய பொருளாதார மந்தம் கடந்த ஆண்டில் பதிவானது

2020இல் உண்மை நியதிகளில் இலங்கைப் பொருளாதாரம் 3.6 சதவீதத்தினால் சுருக்கமடைந்து, சுதந்திரத்திற்குப் பின்னரான அதிகூடிய மந்த நிலையை பதிவுசெய்துள்ளது.

உலகளாவிய நோய்த்தொற்றினால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியுடன் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் 2020ம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19இன் பரவலினைத் தடுக்கும் நோக்குடன், உள்நாட்டிலும், பன்னாட்டு ரீதியிலும் விதிக்கப்பட்ட நகர்வு மீதான கட்டுப்பாடுகள் மற்றும் ஏனைய கட்டுப்பாட்டு வழிமுறைகள், சகல துறைகளிலும் உண்மைப் பொருளாதார நடவடிக்கைக்கு தடங்கலாக இருந்தன.

கைத்தொழில் நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட பாரிய சுருக்கமானது, நிர்மாணப் பணிகள் மற்றும் தயாரிப்புத் துறைகளில் காணப்பட்ட கணிசமான மெதுவடைதலினால் உந்தப்பட்டது.

போக்குவரத்து, ஏனைய தனியாள் பணிகள், தங்குமிடம், உணவு மற்றும் குடிபானம் என்பனவற்றில், உலகளாவிய நோய்த்தொற்றினால் உந்துதலளிக்கப்பட்ட மெதுவடைதலினால், பணிகள் நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்க சுருக்கத்தினைப் பதிவுசெய்தன.

உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கமானது, நேரகாலத்துடனான கொள்கை ஆதரவு மற்றும் சாதகமான வானிலை நிலைமைகளின் நேர்கணியமான தாக்கத்தினை விஞ்சிக் காணப்பட்டதனால், வேளாண்மைத் துறையும் ஆண்டுக்காலப்பகுதியில் ஓர் சுருக்கத்தினைப் பதிவுசெய்தது.

நுகர்வுச் செலவினம் ஒரு சிறிய வளர்ச்சியைக் காண்பித்த அதேவேளையில், முதலீட்டாளர்களின் மந்தமான மனப்பாங்கினைப் பிரதிபலித்து 2020இல் முதலீட்டுச் செலவினம் சுருக்கமடைந்தது.

தேசிய சேமிப்புக்களின் வீழ்ச்சி, முதலீட்டுச் செலவினத்தின் ஒரு சுருக்கத்தை விஞ்சியதனால், இது 2020இல் சேமிப்பு-முதலீட்டு இடைவெளியில் வீழ்ச்சியினை விளைவித்தது.

இதேவேளை, உலகளாவிய நோய்த்தொற்று தொடர்பிலான நிச்சயமற்றத்தன்மைகளுக்கு மத்தியில், தொழிற்படைப் பங்கேற்பு வீதத்தின் வீழ்ச்சியுடன், 2009இற்குப் பின்னர் முதல் முறையாக தொழிலின்மை 5 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தது.

நடைமுறைச் சந்தை விலைகளிலான, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுருக்கம் மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் தேய்மானம் என்பவற்றின் இணைந்த தாக்கத்தினால், தலைக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டில் 3 ஆயிரத்து 852 அமெரிக்க டொலர்களிலிருந்து 2020இல் 3 ஆயிரத்து 682 டொலர்களுக்கு வீழ்ச்சியடைந்தது.

உலகளாவிய நோய்த்தொற்றானது பொருளாதாரத்தின் மொத்த அளவிலும் ஒர் வீழ்ச்சியை விளைவித்து, 2019இல் 84 தசம் 0 பில்லியன் டொலரிலிருந்து 2020இல் 80 தசம் 7 பில்லியனாகக் காணப்பட்டதாக மத்திய வங்கியின் 2020ம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.