இடைநிறுத்தப்படவிருந்த யாழ்ப்பாணம், கண்டி, பதுளைக்கான சில தொடருந்து சேவைகள் மீள முன்னெடுப்பு!
நாளை முதல் பல தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ள நிலையில், பயணிகளின் கோரிக்கைக்கு அமைய, சில தொடருந்து சேவைகளை மீள முன்னெடுப்பதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், கண்டி, பதுளை, பொலன்னறுவை முதலான இடங்களுக்கான 16 தொடருந்து சேவைகள், நாளை முதல், மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது.
கொவிட்-19 பரவல் காரணமாக, ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தொடருந்து திணைக்களம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கைக்கு அமைய, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் கண்டி முதலான இடங்களுக்கான சில தொடருந்து சேவைகளை மீள முன்னெடுப்பதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு, கோட்டை முதல் காங்கேசன்துறைக்கான, இரண்டு நாளாந்த தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், கொழும்பு கோட்டை முதல் பதுளைக்கான நாளாந்த தொடருந்து சேவை ஒன்றும், கோட்டை முதல் கண்டிக்கான வாரஇறுதி தொடருந்து சேவை ஒன்றையும் முன்னெக்க உள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது..