டெல்லியிலும் முத்திரை பதிக்கும் ஆர்வத்தில் சிஎஸ்கே- சன்ரைசர்ஸ் ஐதராபாத்துடன் பலப்பரீட்சை

சென்னை சூப்பர் கிங்ஸ் பல சீசனுக்குப் பிறகு தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை வான்கடேயில் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற நிலையிலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மந்தமான சென்னை ஆடுகளத்தில் ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்த நிலையில் இரு அணிகளும் டெல்லியில் முதன்முதலாக சந்திக்க இருக்கின்றன.

 

புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கடைசி இடத்திலும் உள்ளன.

 

பேட்டிங்கிற்கு சாதகமான வான்கடே ஆடுகளத்தில் எங்களால் சிறப்பாக பந்து வீசவும் முடியும் என நிரூபித்துக் காட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

 

 

கடைசியாக மோதிய ஆர்சிபி-க்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் சற்று திணறினாலும், கடைசி ஓவரில் ஜடேஜா ஐந்து சிக்சர்களுடன் 37 ரன்கள் (நோ-பால் ஒருரன்) விளாசியதன் மூலம் 191 ரன்கள் குவித்தது. இதன்மூலம் எங்கள் அணி வீரர்களால் கடைசி வரை பேட்டிங் செய்ய முடியும் என்பதை எதிரணிகளுக்கு கம்பீரமாக எச்சரித்துள்ளது.

 

பவர் பிளே-யில் தீபக் சாஹர் 2 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுக்க, இது என்னடா சோதனை? என நினைப்பதற்குள் சுட்டிப்பையன் சாம் கர்ரன் ஆர்சிபி-யின் முதுகெலும்பான விராட் கோலியை 4-வது ஓவரிலேயே வீழ்த்தி பிள்ளையார் சுழி போட்டார். இதுவரை கண்ணில் படாத ஷர்துல் தாகூர் அபாயகரமான தேவ்தத் படிக்கல்லை வீழ்த்தி கூடுதல் பலம் சேர்த்தார்.

 

சிஎஸ்கே அணி

 

அதன்பின் ஜடேஜா (3), இம்ரான் தாஹிர் (2) சுழல் மாயாஜாலத்தில் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் சிக்க சென்னை அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங், பந்து வீச்சு, பீ்ல்டிங் என மூன்று துறைகளிலும் ஜடேஜா, சிஎஸ்கே-வுக்கு 3 வீரர்களுக்கு சமமானவராக திகழ்கிறார். இதனால் எதிரணிகள் 13 பேரை எதிர்த்து விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

வான்கடே மைதானத்திற்கு அப்படியே எதிரானது டெல்லி பெரோஷ் ஷா கோட்லா (அருண் ஜெட்லி). இந்த மைதானம் சற்று மந்தமானது (ஸ்லோ). பந்து பிட்ச் ஆகி பேட்டிற்கு உடனடியாக வராது. இதனால் பேட்ஸ்மேன்கள் திணறக்கூடும். ஆனால் சேப்பாக்கம் மைதான ஆடுகளங்களை போன்று இருப்பதால், விளையாடிய அனுபவம் சிஎஸ்கே வீரர்களுக்கு உண்டு என்பதால், உடனடியாக அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள்.

 

ஓபனிங் பேட்டிங்கில் டு பிளிஸ்சிஸ் சென்னை அணிக்கு பலமாக இருந்து வருகிறார். முதல் போட்டியை தவிர்த்து மற்ற நான்கு போட்டிகளிலும் (36, 33, 95, 50) துணாக இருந்துள்ளார். ருத்துராஜ் ஃபார்முக்கு திரும்பியிருப்பது சாதகம்.

 

டு பிளிஸ்சிஸ் ஒவ்வொரு போட்டியிலும் அசத்தி வருவதால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய வேலை இல்லை. ஆர்சிபி-க்கு எதிராக அம்பதி ராயுடன் உடல் நலம் சரியில்லாத போன்று தோன்றினார் ஒருவேளை அவர் களம் இறங்க முடியவில்லை என்றால் மாற்று பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

 

பந்து விச்சை பொறுத்த வரையில் தீபக் சாஹர் இரண்டு போட்டிகளில் மட்டுமே தலா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்த இரண்டு போட்டிகளிலும் எதிரணியை சிஎஸ்கே குறைந்த ரன்னில் சுருட்டியுள்ளது. அவர் தொடர்ச்சியாக எல்லா போட்டிகளிலும் விக்கெட் வீழ்த்த வேண்டியது அவசியம்.

 

 

எப்போதெல்லாம் அணிக்கு நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் கைக்கொடுக்க நம்ம சுட்டிப்பையன் சாம் கர்ரன் உள்ளார். கொல்கத்தாவிற்கு எதிராக அந்த்ரே ரஸல் ருத்ரதாண்டவம் ஆடிய நிலையில், அவரை க்ளீன் போல்டாகி போட்டியை சிஎஸ்கே பக்கம் திருப்பினார். அதேபோல்தான் ஆர்சிபிக்கு எதிராக கோலி விக்கெட்டை வீழ்த்தி கொடுத்தார்.

 

பந்து வீசும்போது ஆடுகளத்தில் க்ரிப் கிடைத்தால் சுழற்பந்து வீச்சில் ஜடேஜா வல்லவராக திகழ்வார். அதேபோல் இம்ரான் தாஹிரும் அசத்துவார். கடந்தபோட்டியில் மொயீன் அலி ஆடவில்லை. இதனால் தாஹிருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஹூக்ளி, லெக் ஸ்பின் என அசத்தி 2 விக்கெட் வீழ்த்தினார். இருவரில் ஒருவர்தான் களம் இறங்க முடியும். மொயீன் அலி களம் இறங்கினால் பேட்டிங் கூடுதல் வலுப்பெறும். தாஹிர் களம் இறங்கினால் பந்து வீச்சு கூடுதல் வலுப்பெறும்.

 

அதிரடி (டெத் ஓவர்கள்) ஓவர்களில் பிராவோவிற்கு இன்னும் சரியாக பந்து வீசும் வேலை வரவில்லை. அதற்காக அவர் காத்திருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் டெல்லியிலும் சிஎஸ்கே விசில் போட வைக்கும்.

 

அப்பாடா... இப்படி ஒரு மந்தமான ஆடுகளத்தை பார்த்ததே இல்லை எனக் கூறி ஐந்து போட்டிக்குப்பிறகு வேறு இடம் வந்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதாராபாத்.

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

 

முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு, கேன் வில்லியம்சன் களம் இறங்க 4-வது போட்டியில் வெற்றி பெற்றது. கடைசியாக டெல்லிக்கு எதிராக 160 இலக்கை நோக்கி செல்லும்போது, தனி ஒருவனாக போராடினார். இருந்தாலும் போட்டியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. ஆட்டம் ‘டை’ ஆகி, பிறகு சூப்பர் ஓவரில் தோல்வியைத் தழுவியது.

 

சென்னையை விட டெல்லி ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சற்று சாதகமாக இருக்கும். இதனால் டேவிட் வார்னர்  அதிரடியை பார்க்கலாம். பேர்ஸ்டோ சென்னையில் (55, 12, 43, 63, 38) அட்டகாசமான தொடக்கம் கொடுத்தார். அது நீடிக்கலாம். அந்த அணிக்கு மிகப்பெரிய பலவீனமே, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான். அவர்கள் சொதப்பும் வரைக்கும் வெற்றி நிச்சயம் அல்ல.

 

பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் காயத்தால் கடந்த போட்டியில் விளையாடவில்லை. அவர் இந்த போட்டியிலும் விளையாடவில்லை என்றால் பாதிப்பை கொடுக்கும். ஏற்கனவே டி நடராஜன் விலகியுள்ள நிலை, புவி காயம் பந்து வீச்சில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ரஷித் கான் மட்டுமே தற்போது நல்ல பார்மில் உள்ளார். கலீல் அகமது, சித்தார்த் கவுல், விஜய் சங்கர், சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவார்களா? என்பது சந்தேகமே.

 

மொத்தத்தில் 160 ரன்களுக்கு மேல் அடித்தால் வெற்றி பெறக்கூடிய ஸ்கோராக இருக்கும்.