நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் கொரோனா தொற்றுறுதியான மேலும் இரண்டு பேர் நேற்று அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 76 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டிருந்த இரண்டு பேரும் பஹ்ரைனில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொட்டாஞ்சேனை - ஜிந்துப்பிட்டி பகுதியில் கொரோனா தொற்றுறதியானவராக முன்னதாக அடையாளம் காணப்பட்ட கடற்படை அலுவலகரிடம் ஐந்துமுறை மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் அவருடன் நெருங்கிய தொடர்பை பேணி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 154 பேரிடம் மேற்கொள்ளப்பட்டிருந்த பீ.சி.ஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த கடற்படை அலுவலகர் மருத்துவமனையில் இருந்து நேற்று வெளியேறியுள்ளார்.
அத்துடன் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த குறித்த 154 பேரையும் மீண்டும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியாகியிருந்த மேலும் 18 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து நேற்று வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இதுதவிர, 160 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.