இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 421 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 421 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு தொடர்ந்தும் புதிய தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் நிலைக்கு தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மாத்திரம் இதுவரையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 97 ஆயிரத்து 836 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் அங்கு இதுவரையில் இந்த வைரஸ் தொற்று காரணமாக 19 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த உலக அதிசியங்களில் ஒன்றான தாஜ்மஹால் இன்று முதல் மீள திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாளொன்று தாஜ்மஹாலுக்கு 80 ஆயிரம் சுற்றுலாப்பிரயாணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சுகாதார பரிந்துரைகளுக்கு அமைவாக 5 ஆயிரம் பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்து 46 ஆயிரத்து 534 ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுறுதியான 65 லட்சத்து 26 ஆயிரத்து 75 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.