கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் வெடிகுண்டு தயாரிப்பு! ஆசிரியை ஒருவர் திடீர் கைது
கிளிநொச்சி – பளை, இயக்கச்சியில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்தமை தொடர்பில் ஆசிரியை ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
குற்றச்செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடையப் பொருட்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் குறித்த ஆசிரியையை கைது செய்துள்ளனர்.
43 வயதுடைய குறித்த ஆசிரியை இயக்கச்சி பகுதி பாடசாலையொன்றில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெடிச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளிற்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதியைச் சுற்றி பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது இரண்டு கைக்குண்டுகளும், கரும்புலி நாள் பதாதை ஒன்றும் தொலைபேசி, மடிக்கணணி மற்றும் இணைய இணைப்புக் கருவி, இறுவெட்டு ஆகியவற்றை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் சம்பவத்தில் படுகாயமடைந்தவர், முன்னாள் போராளி என்றும் அவர் ஜனநாயக போராளிகள் கட்சியின் அங்கத்தவராக செயற்பட்டு வந்துள்ளவர் என்றும் பளை காவல்துறையினர் தெரிவித்தனர்.