நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் மரணமடைந்த ஐவரின் விபரங்கள்
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவாகின.
இதற்கமைய கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
செவனகல பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் கடந்த 18ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.
கொவிட் நியூமோனியா நிலையுடன் குருதி விஷமானமை மற்றும் மோசமான சிறுநீரக பாதிப்பு காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தார்.
கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.
கொவிட் நியூமோனியா நிலை, மாரடைப்பு மற்றும் தீவிர சிறுநீரக பாதிப்பு காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனி பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர் கொழும்பு வடக்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி உயிரிழந்தார்.
நியூமோனியா நிலை, குருதி விஷமானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, தீவிர சிறுநீரக பாதிப்பால் இந்த மரணம் சம்பவித்துள்ளது.
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்தநிலையில் கொவிட் நியூமோனியா நிலை, நீரிழிவு, உள்ளிட்ட காரணிகளால் கடந்த 19ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.
கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
கொவிட்-19 நியூமோனியா தொற்றுடன் குருதி விஷமானமையால் ஏற்பட்ட நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது