கொரோனா அச்சம் அதிகரிக்கும் நிலையில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் நோயாளர்கள் அனுமதிக்கப்படும் நிலையும் உயர்வு!
நாட்டில் கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் நோயாளர்கள் அனுமதிக்கப்படும் நிலைமை அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் முன்னதாக கொரோனா வைரஸ் கண்டறியப்படாத பகுதிகளில் கடந்த சில நாட்களில் நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் தற்போது விஞ்ஞான ரீதியான தரவுகளை மீளாய்விற்கு உட்படுத்தல் மற்றும் தகவல்களை ஆராயும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் அதிகரித்து வரும் கொவிட்-19 பரவல் நிலைமை தொடர்பில் பொது மக்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, புத்தாண்டு காலத்தின் பின்னர், கொவிட்-19 தொற்றுறுதியானர்களின் எண்ணிக்கை 8 வீதமளவில் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பில் கருத்திற்கொள்ளாமல் பொதுமக்கள் செயற்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போதைய நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரத் தவறினால், கொவிட் மூன்றாம் அலை ஏற்படும் அச்சம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கால கவனயீனமான செயற்பாடுகளின் சாதகமற்ற பிரதிபலன்களை ஏப்ரல் மாத இறுதி வாரத்திலும், மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலும் காணக்கூடியதாக இருக்கும்.
எனவே, தற்போது பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கும், அவர்களின் மூலமான பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோருவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.