
யாழில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்
யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடம் கூடத்தில் 350 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் 7 பேருக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் எனவும், ஏனைய நால்வரும் யாழ்ப்பாணம் காவல்நிலையத்தின் உத்தியோகத்தர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவரும் கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.