இரசாயனம் அடங்கிய ஏனைய தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் இந்த வாரம் மீள் ஏற்றுமதி

இரசாயனம் அடங்கிய ஏனைய தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் இந்த வாரம் மீள் ஏற்றுமதி

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கிய தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய ஏனைய கொள்கலன்கள் இந்த வாரத்தில் மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஃப்ளாடொக்சின் இரசாயனம் அடங்கியுள்ளதாக உறுதிசெய்யப்பட்ட 105 மெற்றிக் டன் அளவிலான தேங்காய் எண்ணெய் அண்மையில் மலேசியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது

இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஒரு நிறுவனத்தின் தேங்காய் எண்ணெய்யே இவ்வாறு மீள் ஏற்றுமதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் ஏனைய இரண்டு நிறுவனங்களின் தரமற்ற தேங்காய் எண்ணெய் கொள்கலன்களும் தொடர்ந்தும் சுங்கப்பிரிவின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது

இதேவேளை, புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்ளாடொக்ஸின் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய்யை கண்டறிவதற்காக சந்தைகளில் பெறப்பட்ட மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியிடப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஆய்வுக்காக பேராதனை பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 30 தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் முடிவுகளே இவ்வாறு வெளியிடப்படவுள்ளதாக அந்த அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அதேநேரம், சந்தைகளில் பெறப்பட்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அஃப்ளாடொக்ஸின் இரசாயனம் அடங்கவில்லை என அண்மையில் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.