அதிகரித்த வெப்பத்தால் கிழக்கு மாகாணத்தில் பழங்களின் விற்பனை அதிகரிப்பு
கிழக்கில் தற்பொழுது நிலவும் உஷ்ணம் காரணமாக மக்கள் அதிகம் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தங்களது அன்றாடத் தேவைகளை காலை வேளையிலயே நிறைவு செய்து கொண்டு வீட்டில் முடங்கி விடும் நிலை காணப்படுகின்றது.
உஷ்ணத்தைத் தணிப்பதற்காக நீராகாரப் பானங்கள், பழ வகைகளில் மக்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, கிழக்குப் பிரதேசங்களில் பழ வகைகளின் விற்பனை கணிசமானளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தினசரி வெளி மாவட்டங்களிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு பெருமளவில் கொண்டுவரப்படும் வாழைப்பழம், பப்பாசிப்பழம், தோடம்பழம், தார்ப்பூசணி, வெள்ளரி, மங்குஸ்தான், அன்னாசி, மாம்பழம் உள்ளிட்ட பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டை காரணங் காட்டியும், தற்போதைய உஷ்ணக் காலநிலையை சாதகமாகப் பயன்படுத்தியும் பழ வியாபாரிகள் அதிகரித்த விலையில் பழங்களை விற்பனை செய்வதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்திற்கு தினசரி கொண்டு வரப்படும் பழவகைகள் கடைகளிலும், பிரதான வீதியோரங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பழுதடைந்த பழங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்படுகின்றது.