யாழ்ப்பாணத்தில் சோபையிழந்த புத்தாண்டு வியாபாரம் - கவலையில் வர்த்தகர்கள்
யாழ்ப்பாணத்தில் இம்முறை சித்திரைப் புத்தாண்டு வியாபாரம் சோபையிழந்து காணப்படுகிறது. அதனால் வர்த்தகர்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புடவை விற்பனை நிலையங்கள் பல இரண்டு வாரங்களாக மூடபட்டிருந்தன. எனினும் கடந்த வாரம் வர்த்தக நிலையங்களை மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்ட போதும் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் இருந்தால் அவர்களின் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
கொரோனா பரவல் அச்சநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாநகரில் இம்முறை சித்திரைப் புத்தாண்டு புடவை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதிலும் சிறு வர்த்தக நிலையங்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் அனைத்து பிரதேசங்களிலும் நடைபாதை வியாபாரம் தாராளமாக இடம்பெறுகின்றது. இந்த நிலையும் யாழ்ப்பாணம் மாநகரில் புத்தாண்டு வியாபாரம் பாதிக்கப்படக் காரணம் என்கின்றனர் வர்த்தகர்கள்.